செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் - ஆகஸ்ட் 14 வரை கட்டுப்பணம் செலுத்தலாம்

by Rajalingam Thrisanno 26-07-2024 | 12:29 PM

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என திகதியிட்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(26) காலை அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்தது.

இந்த வர்த்தமானிக்கு அமைவாக ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 

இராஜகிரிய - சரண மாவத்தையிலுள்ள தேசிய தேர்தல்கள் அலுவலகம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் இடமாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

சனி மற்றும் ஞாயிறுக்கிழமையை தவிர அலுவலக  நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரையான காலப்பகுதியில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்த முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் வேட்பாளர் 50,000 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

வேறு அரசியல் கட்சிகள் அல்லது வாக்காளர் அல்லது வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளரினால் 75,000 ரூபா கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை தெரிவுசெய்துகொள்ளும் சட்டத்திற்கு அமைவாக அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(26) காலை வௌியிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.