மழை நீடிக்கும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா மற்றும் அரபுக் கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை

by Staff Writer 16-07-2024 | 12:15 PM

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியால் நாட்டில் தற்போது நிலவும் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலை தொடர்ந்து நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நுவரெலியா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நீடிப்பதாகவும் இடைக்கிடையே மின்தடை ஏற்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்காள விரிகுடா மற்றும் அரபுக் கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் பணிகளில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா மற்றும் அரபுக் கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு திரும்ப வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.