குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப்

குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 16-07-2024 | 12:25 PM

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். 

துணை ஜனாதிபதி வேட்பாளராக 38 வயதான ஒஹியோ செனட் உறுப்பினர் ஜேடி வென்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

மில்வொக்கியில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் அதிகூடிய வாக்குகளை பெற்றதை அடுத்து இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த முறை தேர்தலில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடனிடம் தோல்வியடைந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ளார். 

இதேவேளை, இரகசிய ஆவணங்களை மறைத்து வைத்திருந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

புளோரிடா நீதிமன்றத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டார். 

இந்தத் தீர்ப்பானது துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் உள்ளிட்ட இரகசிய ஆவணங்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ட்ரம்ப் நிரபராதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டில் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் புளோரிடாவிலுள்ள அவரது தங்குமிடத்தின் களஞ்சிய அறையிலிருந்து பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக 40 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.