ICC வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானம்

by Staff Writer 15-07-2024 | 8:03 PM

Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஆசிய வலயத்திலுள்ள நாடொன்றில் இந்த மாநாடு நடத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்கும் 108 உறுப்பினர்கள் உள்ளிட்ட 220 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசிய​ கிழக்கு, ஆசிய பசுபிக் வலயம், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர். 

உலகின் பல நாடுகளிலுள்ள கிரிக்கெட் நிர்வாகிகள், பங்குதாரர்களின் முதன்மையான மாநாடாக கருதப்படும் இந்த மாநாட்டின் போது விளையாட்டின் மூலோபாய நோக்கம், நிர்வாகம், கிரிக்கெட்டின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. 

ஒலிம்பிக் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 

அதற்கமைய பன்முகத்தன்மை, அடையாளம், சுற்றுச்சூழல் நிலைபேறு, விளையாட்டு உள்ளிட்ட தலைப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதுடன் மாநாட்டுக்கு இணையாக கூட்டங்கள், செயலமர்வுகள் உள்ளிட்டவற்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.