உரிய நாளில் தேர்தலை நடத்துங்கள் - ஜனாதிபதி

தேர்தல்கள் ஆணையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கினேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

by Staff Writer 06-07-2024 | 3:23 PM

உரிய நாளில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்கர் மகுலேவே விமல நாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

இதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் உரிய விடயங்களை தௌிவுபடுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்க தாமே பரிந்துரைத்ததாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக தற்போது தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடலை நிறைவுசெய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளதாகவும் கடனை மீள செலுத்துவதற்கு 04 வருட கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டின் கடன்களை முழுமையாக செலுத்த 2043 வரை கால அவகாசம் பெற முடிந்துள்ளதுடன் அந்த நலன்களைப் பயன்படுத்தி இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.