சமூக ஊடகங்கள் மூலம் கணினி குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பலர் கைது

by Bella Dalima 28-06-2024 | 7:31 PM

Colombo (News 1st) வெவ்வேறு கணினி குற்றச்செயல்களை புரியும் மத்திய நிலையங்கள் தொடர்பில், இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலும் தகவல்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த சில நாட்களில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்த மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய வௌிநாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

அவற்றில் பெரும்பாலானவற்றில் சுமார் ஒரு இலட்சம் ரூபா அல்லது அதற்கு அதிகமான சம்பளம் பெற்றுத்தரப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த விளம்பரங்களில் தொழில்கள் தொடர்பில் விசேட தகுதிகளாக கணினி அறிவு மற்றும் தட்டச்சு செய்வதற்கான வேகம் என்பன குறிப்பிடப்பட்டிருந்தன.

கல்வித் தகுதியாக க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி மாத்திரம் போதுமானதென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளம்பரங்கள், மியன்மார் மற்றும் துபாயில் இடம்பெறும் கணினி குற்றங்களுக்கு இளைஞர்களை ஈடுபட ஊக்குவித்த விளம்பரங்களைப் போலவே காணப்பட்டன.

நேர்முகப் பரீட்சையில் நிமிடத்திற்கு 30 ஆங்கில சொற்கள் அல்லது அதற்கும் அதிகமாக தட்டச்சு செய்தால், அவர்கள் தேர்ச்சி பெற்று, கணினி குற்றங்களுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

துபாயை கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த வர்த்தகம் மியன்மார், இந்தியா, பம்போடியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வியாபித்துள்ளது.

வௌிநாட்டிலிருந்து இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞர் ஒருவர் இது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது சீன குற்றக்குழுக்களினால் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விடுவிப்பதற்கு பாரிய பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது கொழும்பு - பத்தரமுல்லை, நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கணினி குற்றங்களில் ஈடுபட்டுள்ள வௌிநாட்டு பிரஜைகளும் இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் 2 வாடகை வீடுகளில் கடந்த 24 ஆம் திகதி 30 வௌிநாட்டுப் பிரஜைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, அல்ஜீரியா, நேபாளம் மற்றும் மலேஷிய பிரஜைகளுடன் இதில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்த குற்றம் முன்னெடுக்கப்படும் ஏனைய கிளைகள் துபாய் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இதனுடன் தொடர்புடைய குழுக்களை 3 சீனப் பிரஜைகள் வழிநடத்துகின்றமை தெரியவந்ததுடன், அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இந்திய பிரஜைகள் 137 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு கொச்சிக்கடையின் 2 பகுதிகளில் 107 பேர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை - ஹீனட்டிகும்புர பகுதியில் 15 பேரும் பத்தரமுல்லை - மாதிவெல பகுதியில் மேலும் 13 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மியன்மாரிலும் இதேபோன்ற சம்பவமே பதிவானது.

சீன குற்றக்குழுக்களின் உறுப்பினர்களால் பலவந்தமாக வௌிநாட்டு இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு வெவ்வேறு கணினி குற்றச்செயல்கள் புரியப்படுகின்றன.

மியன்மாரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி ஆயுதம் ஏந்திய குற்றக்கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இளைஞர், யுவதிகளை மீட்பது தற்போது வரை கடினமாக உள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.