தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாது - தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை

by Staff Writer 24-06-2024 | 1:53 PM

Colombo (News 1st) தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

42000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்கு கூடுதலாக இவ்வாண்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறை, இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத நடுப்பகுதி வரை தொடருமென நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய் கொண்டுவருவதற்கான கொள்கலன் பற்றாக்குறை மற்றும் கப்பல் போக்குவரத்தின் தாமதம் என்பன இந்த நிலைமைக்கு காரணமென அவர் கூறினார்.

அது மாத்திரமன்றி இலங்கைக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளமையும் இதற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பான முழுமையான அறிக்கையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.