புனித ஹஜ்ஜூப் பெருநாள் இன்று

புனித ஹஜ்ஜூப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது

by Staff Writer 17-06-2024 | 1:45 PM

Colombo (News 1st) ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் முன்னுரிமையளிக்கும் நபிகள் நாயகத்தின் வழிமுறைகளை பின்பற்றும் உலகவாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாளை இன்று(17) கொண்டாடுகின்றனர்.

உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரண்டு பண்டிகைகளில் ஒன்றே இதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும்.

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடைய மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார்.

உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனித குலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம், உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தரும் என்பது தனது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மனித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரேஇலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் சமய வழிபாடுகளை நிறைவேற்றி தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்டு சமூக நல்லிணக்கம் பற்றிய செய்தியை உலகிற்கு எடுத்துரைப்பதாகவும் சமத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதே ஹஜ்ஜின் முக்கிய நோக்கமாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்றைய நாள் சமூக நல்லிணக்கத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான மற்றும் தனித்துவமான நாள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மதத்தின் மூலம் மனித சமுதாயம் மனித நேயத்தால் முழுமையடைந்து சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளதாகவும் ஒவ்வொரு மத்தின் கலாசார கொண்டாட்டங்களின் போதும் அது  நிறைவேற்றப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்குரோத்தடைந்துள்ள நாட்டிற்கு இதுவொரு சிறந்த உதாரணமெனவும் இனம், மதம் என எவ்வித பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டு நாட்டை உலகின் முதலாமிடத்திற்கு கொண்டு செல்லும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.