அடுத்த 5 வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் - ஜனாதிபதி

by Staff Writer 17-06-2024 | 4:22 PM

Colombo (News 1st) அடுத்த 5 வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று(16) இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

“சுபீட்சமான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

கொவிட் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 4 வருடங்களாக தொழில்களை இழந்து நிற்போர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதனால் புதிய பாதையில் சென்று தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமா, இல்லாவிட்டால் பழைய முறையில் சென்று வீழ்ச்சியடைவதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

காலத்திற்கு காலம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல், சரியான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினால் நாடு முன்னேற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காகவே பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலத்தை சமர்ப்பித்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனை எந்தவொரு அரசாங்கமும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார்.