ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தூய்மைப்படுத்தவுள்ளதாக விஜேதாச ராஜபக்ஸ தெரிவிப்பு

by Bella Dalima 25-05-2024 | 7:03 PM

Colombo (News 1st) ஊழல்வாதிகளை விரட்டி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தூய்மைப்படுத்தி எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுவதாக கண்டியில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். 
 
அரசியல் கட்சி​யை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்ட விஜேதாச ராஜபக்ஸ, சுதந்திரக் கட்சியில் 99 வீதமானோர் தமக்கு கட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறினார். 

கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் ஊழல்வாதிகளை கட்சியை விட்டு நீக்கி, தூய்மையான சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவதாகவும் நீதிமன்ற உத்தரவு இருந்தாலும்,  எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவதற்காக செயற்படுவதாகவும் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். 

கட்சி தீர்மானித்தால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக தீர்மானங்களை மேற்கொண்ட யுகம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரான மஹிந்த அமரவீர, கட்சியின் அதிகாரம் தற்போது தம்மிடம் இருப்பதாகவும் கட்சிக்குள் முன்னர் காணப்பட்ட பிரச்சினைகள் தற்போது இல்லை எனவும் தெரிவித்தார்.