தமிழ் மக்கள் அறிவுப்பூர்வமான தீர்மானத்தை எடுக்க வேண்டும்: நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

by Bella Dalima 25-05-2024 | 5:52 PM

Colombo (News 1st) எதிர்வரும் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படாதவாறு அறிவுபூர்வமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். 

மட்டக்களப்பில்  கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (25) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே  அவர் இதனை குறிப்பிட்டார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் சந்திரகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கலந்துகொண்டார். 

இதன்போது, அனைத்து ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ, இம்முறை அவ்வாறு நடக்காமல், அறிவுப்பூர்வமான தீர்மானத்தை தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். 

தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர்களுக்காக பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். 

தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெறாத மஹிந்த ராஜபக்ஸ தான் தமிழர்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றியதாக அவர் மேலும் தெரிவித்தார்.