கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சுகாதார நிலையம் அங்குரார்ப்பணம்

by Bella Dalima 25-05-2024 | 3:53 PM

Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறந்த சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இதற்காக 5,320 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த தனியான ஆணைக்குழு நியமிக்கப்படுமெனவும் தெரிவித்தார். 

அத்துடன், அடுத்த மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறினார். 

மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கி அபிவிருத்திகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும்
வலுசக்தித் திட்டங்களை மீள உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். 

கிளிநொச்சியில் இவ்வாறான செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், காணிப்பிரச்சினைகள், காணாமற்போனோர் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.