சிரச வெசாக் வலயம் ஆரம்பம்; புத்த பகவானின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை

by Bella Dalima 23-05-2024 | 8:19 PM

Colombo (News 1st) சிரசா நமாமி சிரச வெசாக் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தல் இன்றிரவு திறந்து வைக்கப்பட்டது.

கட்டாரி ஜாதகக் கதையை சித்தரிக்கும் வகையில், இந்த வெசாக் அலங்காரப் பந்தல்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரர் அலங்கார பந்தலை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

சிரசா நமாமி சிரச வெசாக் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னதான சாலையை இலங்கைக்கான இந்திய  உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க கூரகல ரஜமஹா விஹாரையில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பகவானின் புனித சின்னங்கள் களனி ரஜமஹா விஹாரையில் நேற்றிரவு வைக்கப்பட்டன.

இன்று காலை களனி ரஜமஹா விகாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த புனித சின்னங்களை ஏற்றிய ஊர்தி பவனி  அங்கொடை, கொஸ்வத்தை, இராஜகிரிய, சேனாநாயக்க சந்தி, தாமரைத் தடாக் கலையரங்கப் பகுதியை தாண்டி விகாரமகாதேவி பூங்காவை அடைந்தது.

அதன் பின்னர்   ஊர்தி பவனி கொழும்பு 2, பிரேப்ரூக் பிளேஸில் உள்ள சிரச வெசாக் வலயத்தை இன்று பிற்பகல் வந்தடைந்தது.

இதேவேளை, கொழும்பு மாளிகாகந்த அக்ரஷ்ராவக்க மகா விஹாரையில் இருந்து புத்த பகவானின் பிரதம சீடர்களான செரியுத் மற்றும் முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்களும் வெசாக் பூரணை தினமான இன்று பிற்பகல் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

புத்த பகவானின் புனித சின்னங்கள் உள்ளிட்ட ஏனைய புனித சின்னங்களை வழிபடுவதற்கான வாய்ப்பு பக்தர்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.

இன்றும் (23) நாளையும் (23) சிரச வெசாக் வலயத்திற்கு வருகை தரும் மக்கள் புனித சின்னங்களை வழிபட முடியும்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு சிரச வெசாக் வலயம் நடைபெறவுள்ளது.

சிரச வெசாக் வீதிகளில் நீங்கள் நடமாடும்போது, அழகான வௌிச்சக்கூடுகள், பொம்மலாட்டம் ஆகியவற்றை காண முடியும்.

பக்தி இசை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையில் விசேட கண்காட்சியும் சிரச வெசாக் வலயத்தில் இம்முறை முதற்தடவையாக நடைபெறவுள்ளது.

மிஹிந்தலை அனுலா தூபி அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட கருங்கல் தூபி, நீலகிரி தூபி அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட பளிங்கு தூபிகள், களிமண் பெட்டகங்கள் உள்ளிட்ட தொல்பொருட்களை இங்கு காண முடியும்.

அவலோகிதேஷ்வர போதிசத்துவர் சிலை, தாரா தேவி சிலை, மைத்திரி போதிசத்துவர் சிலை ஆகியவற்றின் மாதிரி சிலைகளும்   சிரச வெசாக் வலயத்தின் தொல்பொருள் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அதிகளவிலான பக்தர்கள் சிரசா நமாமி சிரச வெசாக் வலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.