சம்பள உயர்வு தொடர்பில் புதிய அதிவிசேட வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய அதிவிசேட வர்த்தமானி

by Bella Dalima 23-05-2024 | 6:35 PM

Colombo (News 1st) நாட்டின் அந்நியச் செலாவணிக்கான அச்சாணியாகத் திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயம் இன்றும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான புதிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய  சம்பளத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் காணி குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபா வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபா வழங்கப்படவுள்ளதுடன்,  நாளாந்த மொத்த கொடுப்பனவாக 1700 ரூபா வழங்கப்படவுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமென தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீரவின்  கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான முகாமைத்துவம் காரணமாக தொழிலாளர்களின் சம்பளத்தை செலுத்தத் தவறும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான காணி குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அத்தகைய  தோட்டக்கம்பனிகளுடனான காணிக்குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்யக்கூடிய  வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இதேவேளை,  தொழில் அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை நடைமுறைப்படுத்த முடியாது என எவராலும் கூற முடியாது என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இரண்டு சுற்றுப்  பேச்சுவார்த்தைகளிலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை நிர்ணயித்து தொழில் ஆணையாளரால் வர்த்தமானி ​வெளியிடப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவித்து பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் நீதிமன்றத்தை நாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.