அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் உயிரிழப்பு

பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் உயிரிழப்பு

by Bella Dalima 22-05-2024 | 8:25 PM

Colombo (News 1st) நாட்டில் நிலவும் பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மாதம்பே - குளியாப்பிட்டி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 39 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நாத்தாண்டிய, பிலகட்டுமுல்ல பகுதியில்  இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை படுகாயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

36 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். 

பலாங்கொடை - இராசகலை - ஹெரமிட்டிகல 54 ஆவது பிரிவில் நேற்று முன்தினம் இரவு மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

40 வயதான ஒருவரே உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

பலத்த மழையுடனான வானிலையால் 15 மாவட்டங்களை சேர்ந்த 67,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திலேயே அதிகமானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழையினால் 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை ஊடறுத்து தென்மேற்கு பருவப்பெயர்ச்சி அதிகரிப்பதால், காற்றுடன் கூடிய மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

வடமேல் மாகாணத்திலும் மன்னார், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், வடமேல்,தென் மாகாணங்களிலும் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீட்டர் வரை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

திணைக்களத்தின் அறிவிப்பிற்கமைய, இன்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால், பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழந்துள்ளன.

நுவரெலியாவின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருவதுடன், பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதால், அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.