Colombo (News 1st) பிரான்ஸ் ஜனாதிபதிக்கு Baguette பாண் விநியோகித்து, புலம்பெயர் தமிழர்களின் சாதனை பட்டியலில் இணைந்து கொண்ட தர்ஷன் செல்வராஜாவை உங்களுக்கு நினைவிருக்கின்றதா?
ஆம், தர்ஷன் செல்வராஜாவிற்கு ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
இம்முறை பிரான்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஒலிம்பிக் சுடர் பாரிஸ் நகருக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
இவ்வாறு பிரான்ஸின் பல பாகங்களுக்கு தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்படவுள்ள ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 11,000 பேரில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார்.
இதன்மூலம் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்த அவர், அந்நாட்டில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த வருடம் பிரான்ஸில் Baguette பாணுக்காக நடத்தப்பட்ட போட்டியில், சுவையானதும் தரமானதுமான Baguette பாண் தயாரிப்பாளராக தர்ஷன் செல்வராஜா தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி, ஒருவருட காலத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு Baguette பாண் விநியோகிக்கும் ஒப்பந்தமும் அவருக்கு கிடைத்திருந்தது.
தர்ஷனின் இந்த வெற்றி காரணமாக இம்முறை ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லும் வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்வதற்கு கிடைத்தமை தனது அதிர்ஷ்டம் என்கிறார் தர்ஷன் செல்வராஜா.