யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Bella Dalima 04-01-2024 | 6:35 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். 

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினை தொடர்வதற்கு இடமளிக்க முடியாது எனவும், ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

இதற்கமைய, இது தொடர்பில் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இதேவேளை, ஜனாதிபதியின் யாழ். மாவட்ட விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

எவ்வாறாயினும், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த பொலிஸார்  நடவடிக்கை எடுத்தனர். 

இதன்போது அத்துமீறி உள்நுழைய முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஐவர் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

எனினும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர்களை விடுவிக்கவுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். 

ஏனைய செய்திகள்