Colombo (News 1st) இலங்கை மின்சார சபையை ஆறாகப் பிரித்து நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய வகையிலான நிறுவனத்தை உருவாக்குவதற்கு ஏதுவான இலங்கை மின்சார சட்டத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் மூன்று நாள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (03) ஆரம்பித்தது.
இந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க நடவடிக்கையினைத் தடுப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.
உத்தேச சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இலங்கை மின்சார சபையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
மூன்று நாட்களை எதிர்ப்பிற்கான காலமாக அறிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் கொழும்பு கோட்டையில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று மதியம் ஒன்றுகூடினர்.
உத்தேச மின்சார சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், இலங்கை மின்சார சபையை பகுதிகளாக பிரித்து விற்கும் நிலைமை ஏற்படுமென அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பொலிஸார், பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினர், கடற்படையினர் இலங்கை மின்சார சபையின் பிரதான நுழைவாயில் அருகில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அதன் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
X தளத்தில் அமைச்சர் இதனை பதிவிட்டுள்ளார்.
மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகளும் அடுத்த வாரம் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என கஞ்சன விஜேசேகரவின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.