தொடர் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

by Bella Dalima 19-12-2023 | 8:06 PM

Colombo (News 1st) தேசிய விமான நிறுவனம் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்க முன்மொழியப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கான செயற்பாடுகள் ஏதும் நிறைவுபெறவில்லை.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அண்மித்த காலத்தில் அவ்வாறான 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கட்டுநாயக்காவிலிருந்து பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளது.
 
UL 563 எனும் A 330 வகை விமானம் தொடர்ந்தும் Charles de Gaulle சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விமானம் இலங்கைக்கு நாளை (20) திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறினால் பிரான்ஸில் நேற்று தரையிறங்கிய விமானத்துடன், தற்போது இயக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட இலங்கை விமானங்களின் எண்ணிக்கை 9 ஆகும்.

இவற்றில் 5 விமானங்கள் தேவையான கருவிகள் இல்லாமையால் இதுவரை சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

தற்போது இரண்டு விமானங்களின் பராமரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதாக விமான சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கு ஊழியர்களின் பற்றாக்குறை பாரிய தடையாக இருப்பதாக, விமானப் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பராமரிப்பு பணிகளையேனும் ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
2022 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 138 அனுபவம் வாய்ந்த விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த சேவைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இராஜினாமா செய்துள்ளதுடன், சிலர் பதவி உயர்வு பெற்றும் சிலர் ஓய்வு பெற்றும் சென்றனர்.

விமான சேவை சந்தையில் தற்போதைய தேவையினால், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இராஜினாமா செய்த பெரும்பாலானோர் ஏனைய விமான நிறுவனங்களில் சேவையில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 475 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகின்றபோதிலும், தற்போது 380 விமான தொழில்நுட்ப வல்லுநர்களே உள்ளனர்.

அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் எண்ணிக்கை 280 ஆகும்.

இதனிடையே, 160 பேரில் 40 பேர் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமம் பெற்ற விமானப் பொறியியலாளர்கள் அண்மையில் தெரிவித்தனர்.