ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்குகள் நிராகரிப்பு

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்குகளை தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

by Staff Writer 28-02-2023 | 9:16 PM

Colombo (News 1st) முன்னாள் நிதி அமைச்சர், ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் இரண்டு மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று  அறிவித்தது. 

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29, 31 ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிணைமுறி ஏலங்களில் அரசாங்க நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி குறித்த இரண்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ரவி கருணாநாயக்கவினால் மேல் நீதிமன்றத்தின் இரண்டு வழங்குகளையும் ஆட்சேபனைக்கு உட்படுத்தி, முன்வைத்த  இரண்டு எழுத்தாணை மனுக்கள் மீதான தீர்ப்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

2016 ஆம் ஆண்டு மார்ச் 29 , 31 ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட இரண்டு பிணை முறி ஏலங்களில் 50 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரசாங்க நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ரவி கருணாநாயக்க மற்றும் 11 பேருக்கு எதிராக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த இரண்டு வழங்குகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூவர் அடங்கிய மேல் நீதிமன்றம்,  பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என தெரிவித்து ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளை 13 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்வதற்கு 2022 மார்ச் 4 ஆம் திகதி உத்தரவிட்டது.

பின்னர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டத்திற்கு முரணானது என்பதனால், அதிலிருந்து விடுபடும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி  முன்னாள் நிதி அமைச்சர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நீண்ட நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம்,  ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல முடியாது என தீர்மானித்து இன்று சட்டமா அதிபருக்கு  கட்டளை பிறப்பித்தது.