Colombo (News 1st) இந்தியாவில் இருந்து 20 இலட்சம் முட்டைகள் நாளை (26) கப்பலில் வரவுள்ளன
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அடங்கிய கப்பல் நாளை (26) நாட்டை வந்தடையவுள்ளது.
இதில் 20 இலட்சம் முட்டைகள் அடங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்திகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பாவனைக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, பேக்கரி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் முட்டையை பாவனைக்கு உட்படுத்தும் போது கையுறை பாவிக்க வேண்டும் எனவும் முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அகற்ற அல்லது அழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முட்டையின் எஞ்சிய ஓடுகளை சூழலுக்குள் விடுவிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வௌிநாடுகள் சிலவற்றில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.