Colombo (News 1st) நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட மிக பழமையான 38 வயதான செயற்கைக்கோள் இந்த வாரத்தில் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2,450 கிலோ எடை கொண்ட பணியிலிருந்து ஓய்வுபெறும் குறித்த செயற்கைக்கோள், எங்கு வேண்டுமானாலும் விழலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.
அதாவது, புவிவட்டப் பாதைக்குள் செயற்கைக் கோள் வரும்போதே, அது எரிந்துவிடும். ஆனால், ஒரு சில பாகங்கள் மட்டும் எரியாமல் பூமிக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நாசா கூறுகிறது.
ஆனால், 9,400 இல் ஒரு பங்குதான், இந்த செயற்கைக்கோள் பாகங்கள் வீழ்ந்து யாருக்கேனும் காயம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவில், இந்த செயற்கைக் கோள் பூமியில் விழலாம் என்றும், முழுதாக 17 மணி நேரம் அது பயணித்து பூமியை அடையலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன் பாகங்கள் ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய அமெரிக்காவில் விழலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் என்று 2 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டது.
ஓசோன் மற்றும் இதர சூழ்நிலைகளை கண்காணிக்கும் பணியை இது 2005 வரை மேற்கொண்டிருந்தது. சூரியனிடமிருந்து வரும் சக்தியை பூமி எப்படி கிரகித்துக்கொள்கிறது என்ற ஆராய்ச்சியிலும் உதவி செய்தது.