கஞ்சிப்பானை இம்ரான் பாகிஸ்தான் செல்ல திட்டம்

கஞ்சிப்பானை இம்ரான் பாகிஸ்தான் செல்லும் நோக்கில் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்

by Bella Dalima 03-01-2023 | 6:52 PM

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் என கூறப்படும் கஞ்சிப்பானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான், பாகிஸ்தானுக்கு செல்லும் நோக்கிலேயே இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கஞ்சிப்பானை இம்ரான் தமிழகத்தின் இராமேஷ்வரத்திற்குள் நுழைந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு அண்மையில் அறிவித்திருந்தது.

கஞ்சிப்பானை இம்ரான் மற்றுமொருவருடன் கடந்த 25 ஆம் திகதி இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

கடலோர பகுதியில் இருவரையும்  தேடும்  நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 

இந்நிலையில், கஞ்சிப்பானை இம்ரான் தனது நண்பர்களுடன் இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு ஊடுருவியுள்ளதாக வௌியாகியுள்ள செய்தி  அதிர்ச்சியளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடலோர காவற்படையினர் , தமிழக காவல்துறையின் பாதுகாப்பினை மீறி தமிழகத்தில் நுழைந்தமை எல்லையோர பாதுகாப்புக் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயற்பட்டு வரும் ஹெரோயின், கொக்கெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முஹம்மது இம்ரானுக்கு பிணைப்பு உள்ளதாக  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மோசமாக்கக்கூடும் என  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.