Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யதார்த்தத்தினை தற்போது புரிந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களின் போது, நிலைமைகளுக்கு ஏற்ப கலந்தாலோசனை மூலம் தீர்மானங்களை மேற்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் ஊடாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் என கடந்த 35 வருடங்களாக தாம் கூறி வருகின்ற யதார்த்தத்தினை கூட்டமைப்பினர் தற்போது புரிந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
யதார்த்தத்தினை புரிந்துகொண்டு பேச்சுவார்த்தையின் போது விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பினர் தயாராக இருக்கின்றமையை, கூட்டமைப்பினரின் அண்மைய தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நிலைப்பட்டில் கூட்டமைப்பினர் உறுதியாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கின்ற அமைதியான சூழலை மேலும் வலுப்படுத்தும் வகையில், அனைத்து தமிழ் தரப்பினரும் தற்போதைய அரசியல் சூழலை கையாள்வதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.