Colombo (News 1st) கரீபியன் கடலில் உருவான இயான் (Ian)சூறாவளி கியூபா நாட்டின் மேற்கு பகுதிகளை தாக்கியுள்ளது.
மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. இதன்போது, பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் கியூபாவின் பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கியூபாவை தாக்கிய இயான் சூறாவளி, அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை நோக்கி நகர்ந்து, புளோரிடாவின் தென்மேற்கு கடலோர பகுதிகளை தாக்கியது. பின்னர், கேயோ சோஸ்டா தீவை தாக்கி கரையைக் கடந்தது.
இதன்போது, ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்துள்ளன. கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
புளோரிடா மாகாணத்தில் சுமார் 20 இலட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். புளோரிடா மாகாணத்தின் தென்மேற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜோர்ஜியா, தென் கரோலினாவிலும் சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கியூபாவில் இருந்து பயணித்த அகதிகள் படகு புளோரிடா கடலில் புயலில் சிக்கி கவிழ்ந்ததில் 23 பேர் காணாமற்போயுள்ளனர்.