அச்சுறுத்தி தகவல் பகிர்வோர் தொடர்பில் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையை மீறும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பகிர்வோர் தொடர்பில் விசாரணை

by Staff Writer 19-07-2022 | 6:40 PM

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் மீறப்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்வோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவினால் இந்த விடயம் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர்களை பயமுறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மீறப்படும் வகையில், பொதுமக்களின் எண்ணங்களை மாற்றும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படுவதாக குறித்த அறிக்கையூடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.