by Bella Dalima 24-06-2022 | 6:31 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மணிக்கூட்டு வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, பின்னர் திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், எரிபொருள் நிரப்பு நிலைய மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு குறித்த இளைஞரும் அவரது நண்பரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர்.
இதன்போது, எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து மோதலொன்று இடம்பெற்றது.
இதில் யாழ். உடுவில் - செபமாலை கோவிலடியை சேர்ந்த 24 வயதான குறித்த இளைஞர் தலைக்கவசத்தினால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர், கடந்த திங்கட்கிழமை காலை திடீர் சுகவீனமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயர் குருதி அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இளைஞர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நியூஸ்ஃபெஸ்டுக்கு தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினார்.
இதனிடையே உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் யாழ். உடுவிலில் இன்று நடைபெற்றன.