by Staff Writer 01-06-2022 | 8:45 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி இரத்தினபுரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி - குருவிட்ட பிரதேசத்தில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு 40 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (31) பணி முடிந்து வீடு திரும்பிய போதே அவர் இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்தவர் கிரிஎல பிரதேச செயலாளர் பிரிவின் இடர் முகாமைத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகு பொதாகம தெரிவித்தார்.
குருவிட்ட பிரதேசத்தின் தாழ்நிலப்பகுதிகள் பல தொடர்ந்தும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சை இன்று நிறைவடைந்த நிலையில், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு அருகில் இருக்கும் பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுதும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
அத்தோடு, பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களுக்காக விசேட படகு சேவைகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதனிடையே, வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.