சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்ல முயன்ற 67 பேர் கைது
by Staff Writer 24-05-2022 | 12:16 PM
Colombo (News 1st) நாட்டிலிருந்து சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை சல்லி, சாம்பல் தீவில் நேற்றிரவு(23) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
02 முச்சக்கர வண்டிகளும் கெப் வாகனமொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் பயணித்த 12 ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்வதற்கு படகில் தயாராகவிருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தலில் ஈடுபடும் 05 சந்தேகநபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
வௌிநாட்டுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 45 ஆண்களும் 07 பெண்களும் சிறு பிள்ளைகள் மூவரும் குறித்த படகில் இருந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிலாவௌி மற்றும் உப்புவௌி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.