by Staff Writer 14-04-2022 | 8:35 PM
Colombo (News 1st) காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் பல்வேறு பகுதிகளில் சத்தியாகிரகத்தை முன்னெடுத்தனர்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புத்தாண்டு உணவு மேசையொன்றையும் தயார்ப்படுத்தியிருந்தனர்.
போராட்டத்திற்கான உணவு மேசை என இதற்கு பெயரிடப்பட்டிருந்தது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக புத்தாண்டு உணவு மேசை அமைத்திருந்ததுடன், பொதுமக்களுக்கும் உணவுகளை பகிர்ந்தளித்தனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அல்பிட்டியவிலும் சத்தியாகிரகத்தை முன்னெடுத்தது.
அங்கு வருகை தந்த பொதுமக்கள் போராட்ட உணவு மேசைக்கு பலகாரங்களை அன்பளிப்பு செய்தனர்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் கிரிபத்கொடையில் நேற்று (13) ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது மாணவர்கள் சிலரை தாக்கி அங்கிருந்த கூடாரத்தை உடைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்காக இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற சந்தர்ப்பத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நீதிமன்றம் முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.