உயர்தர பரீட்சை; பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

உயர்தர பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று (01) நள்ளிரவு முதல் தடை

by Staff Writer 01-02-2022 | 10:08 AM
Colombo (News 1st) 2021, உயர்தர பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புக்கள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு இன்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கிணங்க, பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்வதற்கும் நடத்துவதற்கும் பாட இணை விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் முற்றாக தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பாகின்றது. கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வைத்தியசாலை கட்டமைப்பை தயார்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கல்வி நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையிலேயே தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையத்திலும் கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களுக்கு தனியான வகுப்பறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் சித்ரமாலி டி சில்வா மேலும் தெரிவித்தார்.