by Staff Writer 22-01-2022 | 3:26 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான வழிகாட்டல் ஆலோசனைகள் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic/ ஆகிய இணையத்தளங்களில் காணப்படுவதாகவும் அவற்றை உரிய முறையில் பின்பற்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
EXAMS SRI LANKA என்ற இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி செயலியினூடாகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் அதிபர்களிடம் , பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை பெற்று குறித்த செயலியினூடாக சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
தனியார் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி விண்ணப்பங்களை பூரணப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் அல்லது கையடக்க தொலைபேசி செயலியூடாக விண்ணப்பித்ததன் பின்னர் அவற்றிலிருந்து நிழற்பட பிரதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், கோரப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை சமர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.