by Staff Writer 06-01-2022 | 2:54 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 03 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
தவிசாளர் சிவகுமார் ஶ்ரீரஞ்சன் தலைமையில் வரவு செலவுத் திட்டத்திற்கான அமர்வு இன்று முற்பகல் ஆரம்பமானது.
20 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த 10 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பினரும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் 01 உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக சுயேட்சைக் குழுவை சேர்ந்த 03 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தமிழரசுக் கட்சியின் ஒரு உறுப்பினர், சுதந்திரக் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர், சுயேட்சைக்குழுவின் உறுப்பினர் என ஐந்து உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கவில்லை.
குறித்த சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவை தோற்கடிக்கப்பட்ட நிலையில், தவிசாளர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய தவிசாளர் கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.