by Staff Writer 15-12-2021 | 5:54 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
20 உறுப்பினர்களைக் கொண்ட பூநகரி பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 11 வாக்குகளும் ஆதரவாக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 பேரும் எதிர்த்து வாக்களித்தனர்.
சுயேட்சைக்குழுவின் 4 உறுப்பினர்களும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் சபையின் தலைவரும் என 8 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை, யாழ். மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் இன்று (15) நிறைவேற்றப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வசமுள்ள யாழ். மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று சமர்ப்பித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர்களும் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
இதற்கமைய, 3 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
யாழ். மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.