by Bella Dalima 03-12-2021 | 2:54 PM
Colombo (News 1st) எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்புடைய தீப்பற்றல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அனர்த்தங்களை தவிர்ப்பது தொடர்பான நடைமுறை ஆலோசனைகள் வௌியிடப்பட்டுள்ளன.
எரிவாயு அனர்த்தங்களை தடுப்பதற்கு மக்களை மிக விரைவில் தௌிவுபடுப்படுத்தும் நோக்கில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவையாவன...
⭕ எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும்போது சிலிண்டரில் எரிவாயு கசிவு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்
⭕ வீட்டிலுள்ள எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவு உள்ளதென்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ, சந்தேகம் எழுத்தாலோ சிலிண்டரை அங்கிருந்து அகற்றி காற்றோட்டமான பொருத்தமான இடத்திற்கு மாற்ற வேண்டும்
⭕ பொதுமக்கள் தாங்கள் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் இடத்திலேயே, சிலிண்டரில் கசிவு உள்ளதா என பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்
⭕ சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் எங்கும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சீராக்கி (regulator), எரிவாயு குழாய் மற்றும் குக்கர் ஆகியவை தரம் குறைந்தவை அல்ல என்பதை உறுதி செய்யுமாறு பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். (சீராக்கிகளுக்கான SLS தரநிலைகள் SLS – 1180 மற்றும் குழாய்களுக்கு SLS – 1172) - சீராக்கிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டுக் காலம் 5 ஆண்டுகள், குழாய்களுக்கு 2 ஆண்டுகள்.
⭕ எரிவாயு சிலிண்டர்களில் இருந்து வரும் வாசனை தொடர்பில் நுகர்வோர் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
⭕ சிலிண்டரிலிருந்து சீராக்கியை அகற்ற வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆழியை ( lever) மூடுவதன் மூலம் எரிவாயு விநியோகத்தை நிறுத்தவும்.
⭕ எரிவாயு சிலிண்டர் தொடர்பான நிபுணத்துவம் உள்ளவர்களால் பரிசோதிக்கப்படும் வரை, விஞ்ஞானபூர்வமற்ற முறைமைகளூடாக பரிசோதிக்க முயற்சிப்பதன் மூலம் பாரிய அனர்த்தம் ஏற்படக்கூடும்
எரிவாயு கசிவு தொடர்பில் விற்பனை முகவர், அருகிலுள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி குழுவிற்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணைக் குழுவை 0115 811 927 அல்லது 0115 811 929 எனும் இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை எரிவாயு சிலிண்டர் தொடர்பான 131 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.