Colombo (News 1st) கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவு பிராந்தியத்தில் அமைந்துள்ள பார்படோஸ், பிரிட்டன் அரசியின் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், உலகின் மிக சமீபத்திய குடியரசு நாடாக பார்படோஸ் ஆகியுள்ளது.
பார்படோஸ் தீவில் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் குடியேறிய ஆங்கிலேயர்கள், கறுப்பினத்தவர்களை அடிமைகளாக அழைத்து வந்தனர். கறுப்பினத்தவர்களின் உழைப்பை பயன்படுத்தி பார்படோஸ் தீவை செழிப்பு மிக்க பகுதியாக ஆங்கிலேயர்கள் மாற்றினர்.
இந்த நிலையில், பிரிட்டனிடமிருந்து பார்படோஸ் கடந்த 1966 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தாலும், அந்த நாடு பிரிட்டன் அரசியின் ஆளுகைக்குட்பட்டதாகவே இருந்து வந்தது.
இந்தச் சூழலில், எஞ்சியிருந்த காலனியாதிக்க நடைமுறைகளிலிருந்து பார்படோஸ் தீவு கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் வெளியேறத் தொடங்கியது. லண்டனை சேர்ந்த தங்களது அரசின் தலைமை ஆலோசனைக் குழுவைக் கலைத்துவிட்டு, ட்ரினிடாடை (Trinidad) சேர்ந்த ஆலோசனைக் குழுவை பார்படோஸ் கடந்த 2005 ஆம் ஆண்டு அமைத்தது.
இந்த நிலையில், பிரிட்டன் அரசி ஆளுகையிலிருந்து விலகி குடியரசு நாடாக அந்தத் தீவு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைநகர் பிரிட்ஜ்டவுனில் (Bridgetown) நடைபெற்ற விழாவில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியரசு நாடாக மாறினாலும், காமன்வெல்த் அமைப்பில் பார்படோஸ் தொடர்ந்து அங்கம் வகிக்கும்.
அந்தத் தீவு மக்கள்தொகையில் 91 சதவீதம் கறுப்பினத்தவர்கள் ஆவர். வெள்ளை இனத்தவர்கள் 4 சதவீதமும் இந்தியர்கள் 1 சதவீதமும் அங்கம் வகிக்கின்றனர்.