மக்களை ஆபத்திலிருந்து மீட்குமாறு பிரதமர் ஆலோசனை

12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 16-11-2021 | 6:27 PM
Colombo (News 1st) அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பிரதமர் கேட்டறிந்து கொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதற்கட்ட இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தாமதமின்றி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான சூழ்நிலையை கண்டறிந்து, அதற்கேற்ப முன்னுரிமை அளித்து, மக்களை ஆபத்தில் இருந்து மீட்க திட்டமிடுமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் நிலவும் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அடிக்கடி இடம்பெற்று வருவதனால், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு - கண்டி பிரதான வீதியை கடுகன்னாவையுடன் மூடுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையை ஒருவழிப் பாதையாக போக்குவரத்திற்கு திறப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவ்வாறு இன்றேல் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாற்றுப் பாதையை விரைவில் அபிவிருத்தி செய்யுமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.