யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நாளை (01) முதல் பல்கலைக்கழகமாக மாற்றம்

by Bella Dalima 31-07-2021 | 8:12 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நாளை (01) முதல் தனியான பல்கலைக்கழகமாக இயங்கவுள்ளது. அதன்படி, இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் அமைகின்றது. 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்ட இந்த கல்லூரி 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. 30 வருடங்களின் பின்னர் இந்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் என்ற பெயர் இன்றுடன் நீக்கப்பட்டு நாளை (01) முதல் இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கவுள்ளது. அதற்கான வரத்தமானி அண்மையில் வௌியிடப்பட்டது. வியாபார கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் எனும் மூன்று கற்கை நெறிகளின் கீழ் உயர் கல்வியை வழங்குவதற்காக இந்த பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமான வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கலாநிதி T.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.