by Staff Writer 19-12-2020 | 3:12 PM
Colombo (News 1st) உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியமை தொடர்பில் இதுவரை 57 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நீதிமன்ற கட்டட தொகுதியில் துப்புரவு பணியில் ஈடுபடுவோர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் அடங்கலாக சாட்சியங்கள் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் சாட்சியங்களை பதிவு செய்கின்றனர்.
தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் கண்டறிய அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் நிபுணர்கள் கள ஆய்வில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இவர்களின் கண்காணிப்புகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
தீ பரவியமை தொடர்பான விசாரணைகளுக்காக உயர் நீதிமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராக்களின் காணொளி பதிவுகளும் பெறப்பட்டுள்ளன.
இதுவரையான விசாரணைகளின் அடிப்படையில் எவ்வித வழக்கு ஆவணங்களுக்கும் தீயினால் சேதம் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.