by Staff Writer 12-10-2020 | 6:49 PM
Colombo (News 1st) பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை சட்டமாக்குவதற்கான உத்தரவை நாளைய தினம் ஜனாதிபதி வௌியிடுவார் என அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் அனிசுல் ஹஹ் (Anisul Haq) தெரிவித்துள்ளார்.
பெண்ணொருவர் மீது கூட்டாக கொடூரமான தாக்குதல் நடத்தப்படும் காணொளி ஒன்று கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பரவலடைந்ததை தொடர்ந்து பங்களாதேஷில் பாரிய சீற்றம் உருவாகியிருந்தது.
இதேநேரம், கடந்த ஆண்டு 5,400 பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை தாம் பதிவு செய்ததாக பங்களாதேஷின் செயற்பாட்டுக் குழுவொன்று தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படும் விகிதம் மிக குறைவாக காணப்படுவதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தாம் களங்கப்படுவோம் என பெண்கள் அஞ்சுவதனால் வழக்குகள் பல பதிவு செய்யப்படாமல் போவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வாரம் வௌியாகிய காணொளியை தொடர்ந்து, துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் நாடு தழுவிய ரீதியில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.