வறிய மக்கள் மீதி ஆதிக்கம் செலுத்தும் நுண்கடன் திட்டம்

by Staff Writer 28-09-2020 | 8:39 PM
Colombo (News 1st) யுத்தத்தின் பின்னர் வட கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் சுமார் 85,000 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களையும் இலக்காக கொண்டு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நுண்கடன் நிறுவனங்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துள்ளன. குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிதி சேவை வழங்கும் செயற்பாடாக நுண்கடனை மத்திய வங்கி அறிவித்தாலும் இதனால் மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதா என்பது கேள்விக்குறியே? கிராமிய மக்கள் மாத்திரமின்றி நகர் புறங்களில வாழும் மக்களும் தற்போது நுண் கடன் பொறியில் சிக்கியுள்ளனர். மாதாந்த வாராந்த அல்லது நாளாந்தம் வட்டியுடன் கடனை மீள செலுத்தும் இணக்கப்பாட்டுடன் நுண்கடன் வழங்கப்படுகிறது. எனினும் கடனை மீள செலுத்துவதற்கான இயலுமை தொடர்பில் ஆராயாமல் வழங்கப்படுகின்ற நுண்கடன் காரணமாக கடனை பெறுவோரே சமூக மற்றும் பொருளாதார ரீதியில் சவாலை எதிர்கொள்கின்றனர். இலங்கை நுண்கடன் தொழில் வல்லுநர்களின் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 37 நுண்கடன் நிறுவனங்களில் இருந்து கடந்த ஜூலை மாதம் வரை 2.8 மில்லியன் பேர் கடன் பெற்றுள்ளனர். இவர்களில் 2.4 வீதமானவர்கள் பெண்களாவர். நுண்கடன் நிறுவனங்களை முறையான ஒழுங்குபடுத்தலுக்கு உட்படுத்துவதன் மூலமே மக்களை இந்த அதிக வட்டி கடன் சுமையிலிருந்து மீட்பதற்கான சூழல் ஒருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.