IPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன

IPL போட்டிகள் நாளை துபாயில் ஆரம்பம்

by Staff Writer 18-09-2020 | 7:36 PM
Colombo (News 1st) பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்படப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் T20 கிரிக்கெட் தொடர் துபாயில் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது. நாளை ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 13 ஆவது IPL தொடர் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக இம்முறை துபாயில் நடைபெறுகின்றது. தொடரில் 8 அணிகள் பங்குபற்றுவதுடன் 60 போட்டிகள் நடைபெறவுள்ளன. மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர்கிங்ஸ், டெல்லி கெப்பிட்டல், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ரோயல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகள் தொடரில் பங்குபற்றுகின்றன. IPL தொடரில் 5412 ஓட்டங்களைப் பெற்றுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளார். 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ள மும்பை இந்தியன்ஸின் லசித் மலிங்க அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளார். இம்முறை IPL தொடரில் முதன்முறையாக பங்குபற்றுகின்ற இசுரு உதான பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி சார்பில் களமிறங்கவுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன செயற்படுகின்றார். அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக 29 வயதான அலி கான் IPL தொடரில் பங்குபற்றுகின்றார். கொல்கத்த நைட்ரைடர்ஸ் சார்பில் இவர் இம்முறை களமிறங்கவுள்ளார். கடந்த முறை இறுதிப் போட்டியில் மோதிய சென்னை சுப்பர்கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை ஆரம்பமாகும் 13 ஆவது IPL-இன் முதல் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை நேரப்படி நாளை இரவு 7. 30 ற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.