PCR பரிசோதனைகளை இரட்டிப்பாக்க நடவடிக்கை

PCR பரிசோதனைகளை இரட்டிப்பாக்க நடவடிக்கை

by Staff Writer 23-08-2020 | 3:46 PM
Colombo (News 1st) விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளை இரு மடங்காக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வசதிகளை விமான நிலையத்திற்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார். விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர், வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அதிகளவில் நாட்டிற்கு அழைத்து வருவதே தமது முதற்கடமையாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அடுத்த வாரம் முதல் இரு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனூடாக, தற்போது அழைத்துவரப்படும் இலங்கை பிரஜைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்துவதற்காக 2 PCR இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் நாளொன்றில் அழைத்துவரப்படும் பிரஜைகளின் எண்ணிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. வைத்தியசாலைகளிலுள்ள வசதிகள் மற்றும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய இயலுமை ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, மத்தள விமான நிலையத்திலும் இதற்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க குறிப்பிட்டுள்ளார்.