குருநாகல் அரசவை கட்டடம் தகர்ப்பு: இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

by Staff Writer 22-07-2020 | 4:07 PM
Colombo (News 1st) குருநாகல் புவனேக்க ஹோட்டல் நடத்திச் செல்லப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் இன்று முற்பகல் இந்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், பாதுகாப்பிற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட 5 பரிந்துரைகள் இந்த அறிக்கையில் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன்புறத்திலுள்ள கூரை மற்றும் ஜன்னல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதிகளை தொல்பொருள் ரீதியில் புதுப்பிப்பதற்கான இயலுமையுள்ளதாக நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது. முற்றாக அழிக்கப்பட்டுள்ள பின்புறப் பகுதியில் பலகைகள், செங்கற்கள் உள்ளிட்ட கட்டடப் பொருட்கள் பாதுகாப்பாகவுள்ளதால், பழைய கட்டடத்தை தொல்பொருள் ரீதியில் பாதுகாப்பதற்கான இயலுமையுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை தொல்பொருள் திணைக்களம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நிபுணர் குழு அறிவித்துள்ளது. கட்டடம் அமைந்துள்ள பகுதியில் வீதி விஸ்தரிப்பு திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்குமாறும் நிபுணர் குழு பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தொல்பொருள் பாதுகாப்பு நவடிக்கைக்கு தேவையான நிதியை, அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் அல்லது நபர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறும் நிபுணர் குழு பிரதமருக்கு பரிந்துரை செய்துள்ளது. இரண்டாவது புவனேகபாகு மன்னர் அரசவை நடத்திய கட்டடமென கூறப்படும் பகுதி தகர்க்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நிபுணர் குழுவை பிரதமர் நியமித்திருந்தார். தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் ஐவர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.