by Bella Dalima 09-11-2019 | 4:11 PM
Colombo (News 1st) அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் முக்கியமான வழக்காக உற்றுநோக்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 அளவில் வாசிக்கப்பட்டது.
30 நிமிடங்கள் வரை வாசிக்கப்பட்ட தீர்ப்பானது, நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.வை.சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் உள்ளிட்ட ஐவரின் ஏகமனதான தீர்ப்பு என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்திருந்தார்.
தீர்ப்பின் பிரகாரம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குழாம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டுவதற்கான வக்போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பை 3 மாதத்தில் செயற்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்பிற்கும் சமமாக வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல என்பதையும் இந்திய உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
பாபர் மசூதி இருந்த இடம் முழுமையாக தங்களுக்கு சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை எனவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார்.
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் முடிவு செய்ய முடியாது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
1857 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை அந்த சர்ச்சைக்குரிய இடத்தின் உட்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சன்னி வக்போர்டுக்கு எதிராக ஷியா வக்போர்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒருவரின் நம்பிக்கை மற்றவரின் நம்பிக்கையை சீர்குலைக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வழக்கு தொடர்பிலான தொல்லியல் துறை அறிக்கையை நிராகரிக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
வழக்கு குறித்த நிர்மோகி அகாராவின் வாதம் ஏற்புடையதாக இல்லை என தெரிவித்துள்ள ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம், வெற்றுக் காணியில் மசூதி கட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை , அந்த இடம் பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் வாதமாக அமைவதாக மன்று கூறியுள்ளது.
பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஆவணங்களின் பிரகாரம் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது எனவும் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் குழாம், நடுநிலையைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பை சிரேஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர்.
அயோத்தி வழக்கில் தமது மனுவைத் தள்ளுபடி செய்ததால் வருத்தமில்லை எனவும் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால், சமாதானம் அடைவதாக நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தீர்ப்பை மதிப்பதாக தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் , தீர்ப்பில் திருப்தியில்லை என தெரிவித்துள்ளது.
தீர்ப்பைக் காரணமாக வைத்து யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என குறித்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
மறு சீராய்வு செய்ய கோரிக்கை விடுப்பதாகவும், இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் குறிப்பிட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நிலத்திற்கான உரிமை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து மனுதாரர்களான ராம் லல்லா, நிர்மோஹி அகாரா மற்றும் சுன்னி வக்ஃபு வாரியத்திற்கு சரிசமமாக பிரித்து தீர்ப்பளித்திருந்தது.