by Staff Writer 29-11-2018 | 1:16 PM
Colombo (News 1st) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1300 ஏக்கர் தனியார் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,000 ஏக்கர் தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத காணிகளே இவ்வாறு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரம், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக 5 வருட செயற்பாட்டுக்காலத்தைக் கொண்ட வேலைத்திட்டமொன்று பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 95 வீதமான காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 5 வீதமான காணிகளே விடுவிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
பலாலி, கிளிநொச்சி, முல்லைத்தீவு , கேப்பாப்பிலவு , மயிலிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மீள்குடியர்த்தப்பட்ட மக்களுக்கே இவ்வாறு காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 84,509 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமிருந்ததாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12,000 ஏக்கர் காணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய சில காரணங்களுக்காக குறித்த காணி விடுவிக்கப்படாது எனவும் இலங்கை இராணுவம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.