ஆட்சியாளர்கள் தொடர்பில் சுமங்கல தேரர் அதிருப்தி

ஆட்சியாளர்கள் தொடர்பில் மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் அதிருப்தி

by Bella Dalima 03-05-2018 | 7:53 PM
Colombo (News 1st)  ''வியத் மக'' அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை இன்று சந்தித்தனர். ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையிலான ''வியத் மக'' அமைப்பின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் மல்வத்து மகா விஹாரைக்கு சென்று திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து, நடைபெறவுள்ள வருடாந்த மாநாடு தொடர்பில் விளக்கமளித்தனர். இதன்போது மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் ஆட்சியாளர்கள் தொடர்பில் தமது அதிருப்தியை வௌியிட்டார். நாட்டை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு வரும் எவரும் அதனைச் செய்யவில்லை என ஶ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டார். இந்நாட்டில் நேர்மையாளர்கள் எவரும் இல்லை என சுட்டிக்காட்டிய மகாநாயக்கர், அவ்வாறானவர்களை வௌிநாட்டில் இருந்து தருவிக்க நேரிடும் என தெரிவித்தார். அதிகாரம் இல்லாமல் இருக்கையில் நேர்மையாக இருக்கும் சிலர், அதிகாரம் கிடைத்ததும் நேர்மையின்றி நடந்துகொள்வதாகவும் மகாநாயக்கர் அதிருப்தி வௌியிட்டார். திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ''வியத் மக'' அமைப்பின் பிரதிநிதிகள் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரர், ராமஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் நாபானே பிரேமசிறி தேரர் ஆகியோரையும் சந்தித்தனர்.