நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்

by Staff Writer 20-07-2025 | 7:07 AM

Colombo (News 1st) கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.