.webp)

Colombo (News 1st) 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவினர் அவரது கணக்குகளை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனர்.
விசாரணை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொழும்பு, கரையோர வீதி பகுதியில் அவருக்கு சொந்தமான 05 ஹோட்டல்கள் உள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாட்டிலிருந்து தப்பிச்சென்று துபாயில் தலைமறைவாகியிருந்த ஷிரான் பாசிக், அங்கு வைத்து கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
கடந்த 14ஆம் திகதி அவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
