குழந்தைகளுக்கு காய்ச்சலா? - வைத்தியரை நாடவும்

குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும் - சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

by Staff Writer 26-07-2026 | 10:24 AM

Colombo (News 1st) குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

பெற்றோர் தமது குழந்தைகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும்போது அவர்களின் மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தவறாமல் கொண்டுசெல்ல வேண்டும் என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரதீப் ரத்னசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

வீட்டு வைத்தியம் செய்வதால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான முக்கியமான நேரம் வீணாகுவதாகவும் உடனடியாக சரியான மருத்துவ ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலையில் நெருக்கடி தீவிரமடைய சாத்தியமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.